அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.21¼ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் ஆய்வு

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.21¼ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் ஆய்வு செய்தார்.
சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் இனங்கள் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடமும், பிரதான் மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 66 லட்சத்தில் சிமெண்டு கான்கீரிட் சாலைகள், அச்சுக்கல் சாலைகள், கதிரடிக்கும் களங்கள், பள்ளிக்கூடங்களில் கழிவறைகள், சைக்கிள் நிறுத்தும் கூடம், பொது வினியோக கூடங்களும், பள்ளிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சத்தில் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் ரூ.21 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் ஆய்வு செய்தார். அப்போது அவர், அதிகாரிகளிடம், இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீராஜூதீன், வெங்கட்ரமணன், ஒன்றிய பொறியாளர் சங்கர்கணேஷ், உதவி பொறியாளர் ஜெயதிலகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.