உடலை வாங்க மறுத்து ஆதிவாசி மக்கள் போராட்டம்


உடலை வாங்க மறுத்து ஆதிவாசி மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2023 3:45 AM IST (Updated: 17 May 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானார். இதனால் உடலை வாங்க மறுத்து ஆதிவாசி மக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்

தேவர்சோலை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானார். இதனால் உடலை வாங்க மறுத்து ஆதிவாசி மக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளி பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி கிராமத்தை சேர்ந்த கரியன் என்பவரது மகன் குட்டன் (வயது 49). கூலித்தொழிலாளி. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். ஆனால், மாலையில் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

அப்போது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த வழியில், காட்டு யானை தாக்கி குட்டன் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை

இந்தநிலையில் நேற்று காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை வசதி செய்து தர வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கூடத்துக்கு சென்று வரும் வகையில் வாகன வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், குட்டன் உடலை வாங்க மறுத்தும் செம்பக்கொல்லி ஆதிவாசி மக்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் சித்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தேவர்சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

போலீசார் விசாரணை

பின்னர் போஸ்பாரா முதல் செம்பக்கொல்லி வரை 2½ கி.மீ. தூரத்துக்கு சாலை அமைத்து தரப்படும். குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வர வாகன வசதி செய்யப்படும். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழியை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ. உறுதி அளித்தார்.

இதை ஏற்று ஆதிவாசி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு குட்டனின் உடலை வாங்கி சென்றனர். இதுகுறித்து தேவர்சோலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக குட்டன் குடும்பத்துக்கு முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிதியுதவி வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story