3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே மோதல்- கைகலப்பு


3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே மோதல்- கைகலப்பு
x

திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே மோதல்- கைகலப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் தலைமை தாங்கினார்.

இதில் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அந்தந்த வார்டு செயலாளர்களிடம் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார்.

அப்போது 25-வது வார்டு செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான தங்கராஜ் மாவட்ட செயலாளரிடம் படிவங்களை வாங்கிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அதே வார்டை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான பழனிச்சாமி என்பவர் கவுன்சிலர் தங்கராஜை தள்ளிக்கொண்டு படிவங்களை வாங்க முயற்சி செய்தார்.

கைகலப்பு

இதனால் தங்கராஜிக்கும், பழனிச்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறும் நிலை உருவானது. இதனால் மேடையில் இருந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களை கண்டித்தார். இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பழனிசாமி எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.வையும், தங்கராஜையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பிரச்சினை பெரிதாகி கைகலப்பாக மாறியது. மேலும் கூட்டம் நடைபெற்ற அரங்கில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து பழனிச்சாமியுடன் வந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி குண்டுக்கட்டாக அங்கிருந்து வெளியே தூக்கி சென்றனர். இதன் பின்னரே அங்கு அமைதியான சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே அ.தி.மு.க. கரை போட்ட துண்டை கழுத்தில் போட்டிருந்த நபர் ஒருவர், எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.வை யாராவது பேசினால் சும்மா விட மாட்டேன் என்று கூறியபடி தனது கையில் இருந்த கைத்தடியை சுழற்றியபடி வலம் வந்தார். பின்னர் அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Next Story