தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் அறிவுறுத்தினார்.
போளூர்
தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் அறிவுறுத்தினார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
போளூர் ஊராட்சி ஒன்றியம் திண்டிவனம் ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர்நலத் துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பிறகு நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நமது மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு பல்வேறு அரசு திட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திண்டிவனம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சி குழுக்கள் மூலம் தரிசு நிலங்களை மேம்படுத்துதல் குழுக்கள் மூலம் 15 நபர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தரிசு நிலத்தில் ஊடுபயிர்கள் மா, எலுமிச்சை கருவேப்பிலை மற்றும் மணிலா சிறப்பான முறையில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் நல்ல லாபத்தையும் மசூலையும் பெற்று வருகின்றனர்.
200 எக்டேர் நிலம் தேர்வு
தரிசு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நமது மாவட்டத்தில் பயிர் செய்ய 200 எக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் நெல் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பயிர் வகைக்கு அதிகளவில் தண்ணீர் வசதி தேவைப்படுகிறது. ஒரு சில காலகட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே மாற்றுப் பயிர் பயிர்களான மணிலா மற்றும் சிறுதானிய வகை பயிர்களை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு வேளாண் துறையின் சார்பில் விசைத் தெளிப்பான், கைத்தெளிப்பான் பண்ணைக் கருவிகள், தென்னங்கன்றுகள், துவரை, உளுந்து, நுண்ணூட்டக் கலவை, திரவ உயிர் உரம், பனை விதை உள்ளிட்ட நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் நேரில் வழங்கினார்.
ஆய்வில் கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப்சிங், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாலா, பொறியாளர் ராமகிருஷ்ணன், ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி, போளூர் தாசில்தார் சண்முகம் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.