வளையமாதேவியில் விவசாய தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


வளையமாதேவியில் விவசாய தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x

வளையமாதேவியில் என்.எல்.சி.யை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் வளையமாதேவி கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு மக்கள் அதிகாரம் மாநில பொதுச்செயலாளர் ராஜு தலைமை தாங்கி, உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை, மும்முடி, சோழகன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இவர்களை ஆதரித்து அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், வன்னியர் சங்க மாநிலத் துணை தலைவர் செல்வராசு, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சேரலாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அறவாழி, கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சேகர், மனிதநேய ஜனநாயக கட்சி இப்ராஹிம் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து பேசினர்.

நிரந்தர வேலை

என்.எல்.சி.க்கு நிலம், வீடு கொடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், 2000-2020-ம் ஆண்டு வரை நிலம் கொடுத்த அனைவருக்கும் சமமான இழப்பீடு, சமமான வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு வழங்க வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் முழுமையாக பராமரிக்க வேண்டும், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை எப்போதும் தனியாருக்கு கொடுக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. முடிவில் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் நன்றி கூறினார்.


Next Story