ஆழத்து விநாயகர் கோவில் விழா கொடியேற்றம்

விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றம் இன்று நடக்கிறது.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மேலும் இதையொட்டி கிராம தேவதைகளான அய்யனார், செல்லியம்மனுக்கும், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கும் திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு கிராம தேவதைகளான அய்யனாருக்கும், செல்லியம்மனுக்கும் ஏற்கனவே விழா தொடங்கி முடிவடைந்தது.
இதை தொடர்ந்து விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.50 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 22-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதையடுத்து விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிறது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. மேலும் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக திருவிழாவும், 5-ந் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 6-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 7-ந் தேதி தெப்ப உற்சவமும், 8-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. பின்னர் 9-ந்தேதி விடையாற்றி உற்சவம் தொடங்கி 18-ந்தேதி முடிவடைகிறது. விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை யொட்டி தேர்கள் சீரமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.