அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டிய நிலையே இருக்கிறது: முதல்-அமைச்சர் வருத்தம்

அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டிய நிலையே இருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தத்துடன் கூறினார்.
சென்னை,
தமிழ்நாட்டின் வளர்ச்சி நம் கண்ணுக்கு முன்னால் நன்கு தெரிகிறது. தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த 20 மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 207 தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 209 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 3 லட்சத்து 44 ஆயிரத்து 150 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 207 தொழில் நிறுவனங்களில், இதுவரை 111 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, ரூ.13 ஆயிரத்து 726 கோடி முதலீடு வரப்பெற்றுள்ளது. 15 ஆயிரத்து 529 நபர்களுக்கு வேலை கிடைக்கப்பெற்றுள்ளது. தொழில் அதிபர்களை, நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது நம்முடைய தமிழ்நாடு.
தமிழகத்தில் பணவீக்கம் குறைவு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவீதம்; இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 சதவீதம்; ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 சதவீதம்; கார்கள் ஏற்றுமதியில் 32.5 சதவீதம்; தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 சதவீதம். இவை அனைத்தும் இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை உயர்த்திச்சொல்கின்றன.
இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இதுவும் சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்தான். தமிழ்நாட்டு மக்களின் வாங்கும் திறன் அதிகமாகி இருக்கிறது. இதற்கு காரணம், சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக அனைத்துப்பிரிவு மக்களும் வளர்ந்ததுதான். இதே வேகத்தில் சென்றால் தமிழ்நாடு தன்னிகரற்ற மாநிலமாக உயர்ந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நிதிகளை கேட்டு வாங்க வேண்டிய நிலை
மாநில அரசுகளின் வரி உரிமைகள், நிதி உரிமைகள் பலவும் ஏற்கனவே பறிக்கப்பட்டுவிட்டன. நிதிக்காக மத்திய அரசை சார்ந்திருக்க வேண்டிய நிலை கடந்த 8 ஆண்டுகளில் மேலும் அதிகமாகிவிட்டது. அனைத்து நிதிகளையும் கேட்டுக்கேட்டு வாங்க வேண்டிய நிலைமையே இருக்கிறது. கட்டணம் உயர்த்தினால்தான் சலுகைகள் வழங்கப்படும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.
அரசு நலத்திட்டங்களையும், பல்வேறு சேவைகளையும் மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும்விதமாக 10 ஆயிரத்து 338 புதிய பணியிடங்கள் பல்வேறு துறைகளில் அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அ.தி.மு.க. ஆட்சியைவிட, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மேலும் அதிக கடன் வாங்கியுள்ளதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். இது முற்றிலும் தவறான தகவல். அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி ஆண்டான 2020-2021-ம் ஆண்டில், ரூ.83,275 கோடி நிகர கடனாக பெறப்பட்டது. நன்றாக கவனிக்க வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, கடும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், பல்வேறு புதிய மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியிருக்கின்றபோதிலும், என்னுடைய திறமையான நிர்வாகத்தினால், 2021-2022-ம் ஆண்டில் பெறப்பட்ட நிகரக் கடனை, ரூ.79,303 கோடியாக குறைத்திருக்கிறோம். அதாவது, முந்தைய ஆண்டைக் காட்டிலும், சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்குக் குறைவாகவே கடன் பெறப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
புத்தாக்க தொழில்களுக்கு முன்னுரிமை
சமூக, அரசியல், பொருளாதார, வாழ்வியல், பண்பாட்டு வளர்ச்சியை உள்ளடக்கியதாகவே தமிழ்நாட்டு மாநில வளர்ச்சி அமைய வேண்டும் என்று கருதுகிறேன். அதற்கான திட்டமிடுதல்களை நாங்கள் செய்து வருகிறோம். ஏராளமான புதிய புதிய தொழில் நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் கொண்டு வருகிறோம். புத்தாக்கத் தொழில்களுக்கு முன்னுரிமை தருகிறோம். சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கிறோம். புதிய தொழில் பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன.
என்னுடைய வெற்றிக்கு அடிப்படையாக நான் நினைப்பது, மக்களுக்காக உண்மையாக இருப்பதும், மனச்சாட்சிப்படிச் செயல்படுவதும்தான். இந்தப் பொறுப்புக்கு நான் வரக் காரணமானவர்களே மக்கள்தான். அந்த மக்களுக்கு உண்மையாக நான் இருக்கிறேன். அதற்காக நான் எந்நாளும் உழைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.