ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி சாலையை மேம்படுத்த ரூ.26 கோடி ஒதுக்கீடு
ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி சாலையை மேம்படுத்த ரூ.26 கோடி ஒதுக்கீடு
நாகை அருகே ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி சாலையை மேம்படுத்த ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நாகையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டு ரூ.83 கோடி மதிப்பில் 66 கிலோ மீட்டர் சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. 2022-2023-ம் ஆண்டு ரூ.64 கோடியில் சாலை பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதேபோல் இந்தாண்டு ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாநில சாலையாக மேம்படுத்தும் வகையில் ரூ.51 கோடியே 50 லட்சம் செலவில் 45 கிலோ மீட்டர் கிராமப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது.
ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு
நாகை அக்கரைப்பேட்டை கருவேலங்கடை இணைப்பு சாலை திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்படும். அதேபோல் நாகை - அக்கரைப்பேட்டை ெரயில்வே மேம்பாலம் ரூ.102 கோடியில் மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். நாகை அருகே ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி சாலை மிகுந்த வளைவுகளை கொண்டுள்ளதாகவும், இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு 10 மீட்டர் அகலத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
விளம்பரங்கள் செய்வதை தடுக்க நடவடிக்கை
நாகையில் சாலை விபத்துக்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகளிடம், அலுவலர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. விபத்துக்களை முழுமையாக கட்டுப்படுத்துவதுடன் உயிர் சேதத்தையும் தவிர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள், பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் பாலம் மற்றும் பெயர் பலகைகளில் விளம்பரங்கள் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுசம்பந்தமாக ஆய்வு செய்து போலீசில் புகார் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியான மகளிருக்கு உரிமை தொகை
தமிழக அரசு கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவியாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது.
ரூ.50 ஆயிரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. சாராயம் விற்றவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என்பது தவறான குற்றச்சாட்டாகும்.
தகுதியான மகளிருக்கு ரூ.ஆயிரம் உரிமை தொகை முதல்-அமைச்சர் அறிவித்தப்படி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.