43 கிராமங்களில் எருதுவிடும் திருவிழா நடத்த தேதிகள் ஒதுக்கீடு

எருதுவிடும் திருவிழா நடத்த முதல்கட்டமாக 43 கிராமங்களுக்கு தேதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்துவது குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் மற்றும் துறை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். எருது விடும் திருவிழா நடத்தும் விழாக்குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் விழா நடத்த 78 கிராமங்களில் இருந்து 182 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த மனுக்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சில கிராமத்தினர் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்களை அளித்திருந்தனர். எனவே கூடுதல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து 43 கிராமங்களுக்கு விழா நடத்துவதற்கான தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில கிராமத்தினர் ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதியை ஏற்றுக்கொண்டனர். சில கிராமத்தைச் சேர்ந்த விழாக்குழுவினர் தங்களுக்கு வேறு தேதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக விழா நடத்த அனுமதி கேட்டும் சில விழாக்குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
43 கிராமங்களுக்கு அனுமதி
தொடர்ந்து கூட்டத்தில், ஒவ்வொரு கிராமமாக தேதிகள் ஒதுக்கும் பணி நடந்தது. அப்போது கம்மவான்பேட்டையில் எருது விடும் திருவிழா நடத்த காவல்துறை சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அங்கு கடந்த ஆண்டு நடந்த விழாவில் தகராறு ஏற்பட்டதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில், அந்த கிராமத்தில் இந்த ஆண்டு விழா நடத்துவது குறித்து மனு அளிக்குமாறும் அது குறித்து பரிசீலனை செய்யப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் வரை மட்டுமே 43 கிராமங்களுக்கு விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. மார்ச் மாதம் விழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட விழாக்குழுவினருடன் பிப்ரவரி மாதம் 15-ந் தேதி மீண்டும் கூட்டம் நடத்தி தேதி முடிவு செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்..
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக விழா குழுவினர் பின்பற்ற வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாத வகையில் விழாக்குழுவினர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. போட்டிகள் வருகிற 16-ந் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது.