பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாய்-குழந்தை சாவு


பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாய்-குழந்தை சாவு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:16:54+05:30)

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும், குழந்தையும் இறந்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும், குழந்தையும் இறந்தனர்.

கர்ப்பிணி பெண்

ஆலங்கோடு அருகே உள்ள சரல்விளைைய சேர்ந்தவர் எட்வின் ஜோஸ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில்தான் ஊருக்கு வந்திருந்தார். இவரது மனைவி அருள் ஜாஸ்மின் (வயது 31). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இந்த நிலையில் அருள் ஜாஸ்மின் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து அவர் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதையடுத்து அவரது உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து அருள் ஜாஸ்மின் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணி அளவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை அசைவின்றி இருப்பதால் உடனே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து நள்ளிரவு 12.58 மணியளவில் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்தனர். அப்போது அந்த பெண் குழந்தை இறந்திருந்தது. மேலும் அருள் ஜாஸ்மினின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.

இதுகுறித்து டாக்டர்கள் அருள் ஜாஸ்மினின் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்தனர். குழந்தை இறந்த தகவலை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கவலைக்கிடமாக இருந்த அருள் ஜாஸ்மினுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அருள் ஜாஸ்மின் நேற்று காலை 7.50 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

பிரசவத்தில் தாய், குழந்தை இறந்த சம்பவம் அவர்களது உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருள் ஜாஸ்மின் மற்றும் அவரது குழந்தை சாவிற்கு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்தான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

பிரசவத்தில் தாய், குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story