வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பாராட்டு

மாற்றுத்திறனாளிகள் அமர்வு வாலிபால் போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பாராட்டினார்.
வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பெண்கள் அமர்வு வாலிபால் அணியில் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த தனலட்சுமி கேப்டனாகவும், குடியாத்தம் அடுத்த பரதராமியை சேர்ந்த கே.வி.ரேகா துணை கேப்டன் ஆகவும் உள்ளனர். இவர்கள் தலைமையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பெண்கள் அணியினர் கடந்த மாதம் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் கோப்பைக்கான அமர்வு வாலிபால் போட்டியில் வெற்றிபெற்று முதல் பரிசும் கோப்பையும் வென்றது.
இதே போல் பெரியார் மணியம்மை கல்லூரியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான அமர்வு வாலிபால் போட்டிகளில் தமிழக அணியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் பங்குபெற்று விளையாடினர். 9 மாநில அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் தமிழக அணி மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றது.
பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று சாதனை படைத்த வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமர்வு வாலிபால் அணியை மற்றும் பயிற்சியாளரை குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ. அமலுவிஜயன், குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் வீராங்கனைகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் கள்ளூர்ரவி, நகரமன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோமோகன், என்.கோவிந்தராஜ், நவீன்சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.