வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கூடுதலாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கூடுதலாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கூடுதலாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.
கமிஷனர் ஆய்வு
வேலூர் புதிய பஸ் நிலையம் சுமார் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தற்போது சென்னை, அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையம் சுத்தம் இல்லாமல் இருப்பதாகவும், இரவு நேரத்தில் மர்மநபர்கள் மது அருந்துவதாகவும் புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் கண்ணாடி உடைந்திருந்தது தெரியவந்தது. அதை மாற்றவும், டெர்மினல் கட்டிடத்தில் உள்ள கழிவறைகளை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கூடுதல் கேமராக்கள்
வேலூர் புதிய பஸ் நிலையம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கழிவறைகள் சுத்தமாக வைக்கவும், இதுவரை பயன்படுத்தாமல் இருந்த கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தற்போது 3 ஷிப்டுகளாக 3 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கூடுதலாக 3 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இனி ஒரு ஷிப்டுக்கு இருவர் பணியில் இருப்பார்கள். பஸ் நிலையப் பகுதியில் சிறுநீர் கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது பஸ் நிலைய வளாகப் பகுதியில் 16 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் கூடுதலாக 36 கண்காணிப்பு கேமராக்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொருத்தப்பட உள்ளது. பஸ் நிலையம் இந்த வார இறுதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.