புல்லை அறுத்துக் கொண்டிருந்த போது எந்திரத்தில் அடிபட்டு அரசு ரப்பர் கழக ஊழியர் சாவு

புல்லை அறுத்துக் கொண்டிருந்த போது எந்திரத்தில் அடிபட்டு அரசு ரப்பர் கழக ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
அழகியபாண்டியபுரம்,
புல்லை அறுத்துக் கொண்டிருந்த போது எந்திரம் எதிர்பாராதவிதமாக தாக்கியதில் அரசு ரப்பர் கழக ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
அரசு களப்பணியாளர்
பூதப்பாண்டியை அடுத்துள்ள தடிக்காரன்கோணம் பத்மநாப நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவருக்கு மீனாகுமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர் கீரிப்பாறை அரசு ரப்பர் கழக கோட்டத்திற்கு உட்பட்ட பரளியாறு பிரிவில் களப்பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் இவர் பரளியாறு ரப்பர் தோட்டம் பகுதியில் எந்திரம் மூலம் ரப்பர் மரத்தை சுற்றியுள்ள புற்களை வெட்டிக் கொண்டிருந்தார்.
எந்திரம் தாக்கி சாவு
அப்போது எந்திரம் தவறுதலாக அவருடைய கையின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி திடீரென நெஞ்சு பகுதியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவர் படுகாயமடைந்து அதே இடத்திலேயே ரத்தம், சொட்ட சொட்ட சுருண்டு விழுந்து கதறினார். உடனே அவருடன் பணியில் ஈடுபட்ட சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லுரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.