அங்கன்வாடி ஊழியர் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் அருகே உள்ள சாமியார்பட்டியை சேர்ந்தவர் கோபால். சமையல் தொழிலாளி. அவருடைய மனைவி காளீஸ்வரி (வயது 45). அங்கன்வாடி மைய ஊழியர். நேற்று இவர்கள் 2 பேரும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வந்ததும், காளீஸ்வரி திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு காளீஸ்வரியை தடுத்தனர். பின்னர் அவரை மீட்டு உடலில் போலீசார் தண்ணீரை ஊற்றினர். மேலும் காளீஸ்வரி தீக்குளிக்க முயன்றதை வீடியோ எடுத்ததாக கூறி அவருடைய கணவரை போலீசார் கண்டித்தனர்.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் காளீஸ்வரி கூறுகையில், ஊராட்சி செயலாளர் ஒருவர் என்னை தரக்குறைவாக பேசினார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் சிலர் என்னை மிரட்டுகின்றனர். அதனால் மனு கொடுக்க வந்த போது விரக்தியில் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு அறிவுரை கூறி மனு கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.