'அரசியல் அனுபவம் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார்'

‘அரசியல் அனுபவம் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார்’ என்று முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பேசினார்.
அ.தி.மு.க. சார்பில் நிலக்கோட்டை கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் பேரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம், நிலக்கோட்டையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு, நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர், பேரூர் செயலாளர்கள் தண்டபாணி (அம்மையநாயக்கனூர்), வி.எஸ்.எஸ்.சேகர் (நிலக்கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தேர்தல் களத்தின்போது கட்சி வெற்றி பெறுவதற்கு மிகுந்த ஒத்துழைப்பு தரக்கூடிய நிர்வாக குழு எதுவென்றால், அது தேர்தல் பூத் கமிட்டி தான். பூத் கமிட்டி நிர்வாகிகள் மூலமே தேர்தலில் வெற்றி பெற முடியும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் அனுபவம் இல்லாமல் பேசி வருகிறார். அவர் தற்போது நடத்தும் பாதயாத்திரை மூலம் நாங்கள் தான் தமிழகம் என்று மாயபிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார். மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதை அனைத்து அ.தி.மு.க. தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். மத்திய அரசு மீதும், மாநில அரசு மீதும் மக்கள் வெறுப்பில் உள்ளனர். தி.மு.க. என்பது மக்களுக்கான கட்சி அல்ல. அது குடும்ப கட்சியாக மாறிவிட்டது" என்றார்.
இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன், எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் முனியப்பன், மாவட்ட வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.