குறைதீர்வு கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு


குறைதீர்வு கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு
x

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவித்தனர். கடந்த மாதம் தெரிவிக்கப்பட்ட குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

கையேடுகள்

பாரம்பரிய நெல் விதைகளை விதைப்பதற்கு விதைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த பருவத்தில் எந்த ரகம் பயிரிட வேண்டும் என்பது குறித்து சில விவசாயிகளுக்கு தெரியவில்லை. எனவே விவசாயிகளுக்கு அதுகுறித்த தகவல் அடங்கிய கையேடுகள் வழங்க வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் மாடுகளுக்கு புதிய வகை நோய் பரவுகிறது. இதனால் காய்ச்சல் ஏற்பட்டு ஓரிரு நாட்களில் மாடுகள் இறந்து விடுகின்றன. குடியாத்தம் மாவட்ட எல்லையில் மாடுகளுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆய்வு செய்ய வேண்டும்.

ராஜாதோப்பு அணை

ராஜாதோப்பு அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒடுகத்தூர் அருகே அதிக அளவில் கொய்யா விளைகிறது. எனவே அங்கு கொய்யா ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசினர்.

விவசாயி கைது விவகாரம்

கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது விவசாயி ஒருவர் கூறுகையில், பேரணாம்பட்டு சாரங்கல் கிராமத்தில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரத்தில் ஒலி எழுப்பும் பேட்டரி கருவியை பொருத்தியதாக பக்கத்து நிலத்தை சேர்ந்த மோகன்பாபு என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அதுகுறித்து முடிவு எடுக்க முடியாது என்றார்.

அப்போது விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில், வனத்துறையினர் எதன் அடிப்படையில் மோகன்பாபுவை கைது செய்தனர்?, அவரால் தான் சிறுத்தை இறந்தது என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் என்ன?, அங்கு வன விலங்குகள் வராமல் தடுப்பதற்கு வனத்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?, ஒலி எழுப்பும் பேட்டரி கருவியால் வனவிலங்குகளுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டும்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

வாக்குவாதம்

ஆனால் இதற்கு வனத்துறை சார்பில் பதில் அளிக்க முடியாமல் அவர்கள் அமைதி காத்தனர். இதனிடையே அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம், சலசலப்பு ஏற்பட்டது. கோர்ட்டில் வழக்கு உள்ளது நாங்கள் ஏதும் செய்ய முடியாது. அதற்கான இடம் இது இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, இந்த கூட்டம் விவசாயிகளுக்கான கூட்டம். பொய் வழக்கு போட்டு ஒவ்வொருவரையும் கைது செய்தால் ஏழை விவசாயிகள் அனைவரும் கோர்ட்டுக்கு தான் செல்ல வேண்டும். இந்த குறைதீர்வு கூட்டம் எதற்கு நடத்த வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் அவர்கள் வேறு கோரிக்கைகள் குறித்து பேசாமல் அமைதியாக இருந்தனர்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், உங்களது கோரிக்கையை மனுவாக கொடுங்கள். கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து விவசாயிகள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மோகன்பாபு தனது விவசாய நிலத்தில் பொருத்திய ஒலி எழுப்பும் பேட்டரி கருவியையும் அவர்கள் கூட்டத்துக்கு கொண்டுவந்திருந்தனர்.


Next Story