கந்துவட்டி சட்டத்தில் வியாபாரி கைது

கந்துவட்டி சட்டத்தில் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
காரைக்குடி கோவிலூர் சாலை சிவானந்த மட தெருவை சேர்ந்தவர் குழந்தை நாதன் (வயது 47). இவர் ஐஸ் கம்பெனி தொழில் செய்து வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆறுமுக நகரை சேர்ந்த செந்தில் என்ற இரும்பு வியாபாரியிடம் 2017-ல் தனது வீடு மற்றும் மனையிட ஆவணங்களை வைத்து ரூ. 10 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதன் பிறகு அவர் வெளியூர் சென்று விட்டார். தற்போது ஊர் திரும்பிய குழந்தைநாதன் தனது அப்பா கஸ்பார் மூலம் தான் வாங்கிய கடன் அதற்கான வட்டி ஆகியவற்றை செந்திலிடம் திருப்பிச் செலுத்தி விட்டார். அதன்பின் வீடு மற்றும் மனை இடங்களுக்கான ஆவணங்களை திருப்பி கேட்டபோது செந்தில் கந்து வட்டி கணக்கிட்டு இன்னும் 20 லட்ச ரூபாய் தர வேண்டும் என கூறி ஆவணங்களை தர மறுத்துள்ளார். இதுகுறித்து குழந்தை நாதன் காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுவினோஜி உத்தரவின்பேரில் காரைக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேசுவரி, கந்துவட்டி கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தார்.