சேலம் அருகே வீடு கட்டி தருவதாக ரூ.1½ கோடி மோசடி-கட்டிட காண்டிராக்டர் கைது

சேலம் அருகே வீடு கட்டி தருவதாக ரூ.1½ கோடி மோசடி செய்த கட்டிட காண்டிராக்டர் கைது செய்யப்பட்டார்.
கட்டிட காண்டிராக்டர்
சேலம் அருகே தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்ராஜ் (வயது 31). இவர் நிலவாரப்பட்டியில் புதிதாக வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் சுரேந்திரன் என்பவரிடம் சதுர அடி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 200 என்று விைல பேசி முடித்து அதற்கான ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி போடப்பட்டது.
இதையடுத்து ரூ.1 கோடியே 61 லட்சத்து 54 ஆயிரத்து 347-ஐ சுரேந்திரன் மற்றும் அவரது மனைவி தீபா ஆகியோரின் வங்கி கணக்கிற்கு கதிர்ராஜ் அனுப்பி வைத்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டை கட்டிக்கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக சுரேந்திரன் மீது மல்லூர் போலீஸ் நிலையத்தில் கதிர்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இதனிடையே, வீடு கட்டி தருவதாக ரூ.1 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் இந்த மோசடி ெதாடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இந்த வழக்கில் நேற்று கட்டிட காண்டிராக்டர் சுரேந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள சுரேந்திரனின் மனைவி தீபாவை போலீசார் தேடி வருகின்றனர்.