கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா விற்ற 5 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா விற்ற 5 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை, கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடத்தினர்.

அந்த வகையில் சூளகிரி போலீசார் குருபராத்பள்ளி அருகில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த நபரை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் குருபராத்பள்ளியை சேர்ந்த மகேஷ் (வயது29) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

கைது- பறிமுதல்

ஓசூர் மது வலக்கு அமல் பிரிவு போலீசார் அஞ்செட்டி அருகே கொடகரை பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த வாலிபரை சோதனை செய்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கும்மனூரை சேர்ந்த முகமது பிலால் (21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்தும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று மளிகை, பெட்டிக்கடைகளில் குட்கா பதுக்கி விற்ற வி.மாதேப்பள்ளி மூர்த்தி (38), இட்டிக்கல் அக்ரஹாரம் இளவரசன் (35), அட்டகுறுக்கி லோகேஷ் (42) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story