நத்தம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது

நத்தம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நத்தம் அருகே உள்ள லிங்கவாடியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 41). டி.வி மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (37). கடந்த 6-ந்தேதி லிங்கவாடியில், இவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த உதயகுமார், தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜை வெட்டி கொலை செய்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உதயகுமாரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர், நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவங்கள் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்தநிலையில் உதயகுமாரை அடித்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய லிங்கவாடியை சேர்ந்த சோலை (21), வெள்ளிமலை (39), பாலகுமார் (32), சிவம் (26), அருண்குமார் (26), சுரேஷ் (39) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.