தலைமறைவான தம்பி உள்பட 2 பேர் கைது

அஞ்செட்டி அருகே ஆட்டோ டிரைவர் கொலை தொடர்பாக தலைமறைவான அவரது தம்பி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே ஆட்டோ டிரைவர் கொலை தொடர்பாக தலைமறைவான அவரது தம்பி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆட்டோ டிரைவர் கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி யாரப் நகர் மசூதி தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் முரளி (வயது. 37). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அவரது தம்பி தேவராஜ் (35) என்பவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்த மாடுகளை பிடித்து வருவதற்காக முரளி சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் முரளியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தேவராஜ், நிலத்தகராறில் தனது அண்ணனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான தேவராஜை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
2 பேர் கைது
அதன்பேரில் தனிப்படை போலீசார் தலைமறைவான தேவராஜை வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே அந்த பகுதியில் பதுங்கி இருந்த தேவராஜை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தேவராஜ், தனது நண்பரான சின்ன மேனகரம் பகுதியை சேர்ந்த அசோக் (28) வுடன் சேர்ந்து முரளியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அசோக்கையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.