பா.ஜனதா நிர்வாகி கொலையில் 8 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான நபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே பா.ஜனதா நிர்வாகி கொலை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான நபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பா.ஜனதா பிரமுகர்
திருப்பத்தூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் கலிகண்ணன் (வயது 52). நகர பா.ஜனதா செயலாளர். ரியல் எஸ்டேட் தொழில், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். குடும்பத்தினருடன் பிரச்சினை காரணமாக தனியாக வசித்து வந்த அவரை கடந்த 23-ந் தேதி இரவு மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர்.
இதனிடையே நேற்று முன்தினம் காலை ஊத்தங்கரை அருகே வெப்பாலம்பட்டியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கலிகண்ணன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கலிகண்ணனுக்கும், திருப்பத்தூர் சேர்மன் ஆறுமுகம் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் ஹரிவிக்னேஷ் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததும், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கலிகண்ணனை காரில் கடத்தி சென்று கொலை செய்ததும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து ஹரிவிக்னேசை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவரது செல்போன் டவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இருந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். நேற்று முன்தினம் மாலை ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் தனியார் மருத்துவமனை அருகில் காரில் வந்த அரிவிக்னேசை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்போது அவருடன் காரில் மேலும் 5 பேர் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 6 பேரும் கலிகண்ணனை கழுத்தை அறுத்துக் கொன்றதும், ஓசூர் கோர்ட்டில் சரண் அடைய சென்றதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 6 பேரையும் விசாரணைக்காக திருப்பத்தூர் அழைத்து சென்ற போலீசார் இரவு ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர்.
6 பேர் கைது
பின்னர் இந்த கொலை தொடர்பாக ஹரிவிக்னேஷ், காரப்பனூர் அம்பேத்கர் நகர் அருண்குமார் (25), ஆந்திர மாநில குப்பம் சாந்திபுரம் ஆனந்த் (22), தக்காளி மார்க்கெட் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22), கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அருண் (22), மற்றும் குப்பத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான ஹரிவிக்னேஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
கோர்ட்டில் வழக்கு
எனக்கும், கலிகண்ணனுக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஒரு முறை கலிகண்ணனை கொலை செய்ய முயன்ற போது அவர் உயிர் தப்பினார். அந்த வழக்கு திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கை பல முறை வாபஸ் பெற சொன்னேன். ஆனால் கலிகண்ணன் வாபஸ் வாங்க மறுத்து விட்டார். இது தொடர்பாக அவருடன் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.
இந்த நிலையில் 23-ந் தேதி கலிகண்ணனை காரில் கடத்தி கொண்டு இந்த வழக்கில் சாட்சி சொல்லக் கூடாது என்று மிரட்டினோம். அவரை அழைத்து கொண்டு ஊத்தங்கரை, மொரப்பூர் உள்பட பல பகுதிகளுக்கு காரில் சென்றோம். நாங்கள் கடைசியாக ஊத்தங்கரை அருகே வெப்பாலம்பட்டியில் வைத்து பேசினோம். அப்போதும் அவர் வழக்கை வாபஸ் பெற மாட்டேன். சாட்சி சொல்லத்தான் போகிறேன் என்று கூறினார்.
கழுத்தை அறுத்து கொன்றோம்
இதனால் ஆத்திரத்தில் நாங்கள் கத்தியால் கலிகண்ணனை கழுத்தை அறுத்துக்கொலை செய்தோம். பிறகு உடலை அந்த இடத்திலேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டோம். இந்த நிலையில் நாங்கள் பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை வைத்து நாங்கள் ஓசூர் பகுதியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ரெயில் பயணத்தில் பழக்கம்
கைதான 6 பேரிடம் இருந்து கார், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ஹரிவிக்னேஷ் ரெயிலில் பயணம் செய்த நேரத்தில் மற்ற நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு அவர்கள் அடிக்கடி திருப்பத்தூர் வந்துள்ளனர். அப்போது ஹரிவிக்னேஷ் தனக்கு இருந்த பிரச்சினை குறித்து தனது நண்பர்களுடன் கூறி வந்தார்.
அப்போது அவர்கள் ஒன்று கூடி கலிகண்ணனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. கைதானவர்களில் குப்பம் மணிகண்டன், அருண் ஆகிய 2 பேரும் பெங்களூருவில் ஒரு தனியார் கால்சென்டரில் வேலை செய்து வந்துள்ளனர். 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 2 பேர் கைது
இந்த நிலையில் பா.ஜ.க. பிரமுகர் கொலை தொடர்பாக திருப்பத்தூரை சேர்ந்த நசுருதீன் என்பவரின் மகன் மயினு என்கிற அப்துல் அலி உசேன் (வயது 30), நசீர் என்பவரின் மகன் சமீர் (23) ஆகிய 2 பேரையும் நேற்று இரவு ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர். இத்துடன் இந்த கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.