தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

வாழப்பாடி அருகே போலீஸ் என கூறி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற வழிப்பறி திருடனை போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி
வாழப்பாடி அருகே போலீஸ் என கூறி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற வழிப்பறி திருடனை போலீசார் கைது செய்தனர்.
பணம் பறிக்க முயற்சி
வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி குமாரசாமியூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 63). கூலித்தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வாழப்பாடி அருகே போலீஸ் உடை அணிந்தபடி நின்ற ஒருவர், கந்தசாமியை வழி மறித்தார்.
மேலும் அவர் போலீஸ் என கூறி மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காண்பிக்கும்படி கூறினார். ஹெல்மெட், லைசென்ஸ் இல்லாத குற்றத்திற்காக ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டனர்.
திருடன் கைது
அவர்கள் சந்தேகம் அடைந்து போலீஸ் என கூறியவரிடம் எந்த போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கிறீர்கள் என கேட்டனர். மேலும் அவருடைய மோட்டார் சைக்கிளில் வனத்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால், அவரை வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்ததில், ஆத்தூர் தாலுகா கடம்பூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன் (37) என்பதும், ஆத்தூர் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற திருடன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகேசனை கைது செய்தனர். மேலும் அவருடைய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.