சம்பள உயர்வு கேட்டுசெங்கல் சூளை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
கம்பம் பகுதியில் சம்பள உயர்வு கேட்டு செங்கல் சூளை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
செங்கல் சூளை தொழிலாளர்கள்
கம்பம், கூடலூர், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை ஆகிய பகுதிகளில் சுமார் 50 செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு சுமார் 350 குடும்பத்தினர் தங்கி வேலை செய்து வருகின்றனர். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு செங்கல் அறுவைக்கு தகுந்தாற்போல் கூலி வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு ஆயிரம் செங்கலுக்கு ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.885 கூலியாக வழங்கப்பட்டது.
அதன்படி, நடப்பாண்டில் கடந்த ஆண்டை போல ரூ.115 சேர்த்து வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் செங்கல் சூளை உரிமையாளர்கள் சம்பள உயர்வு வழங்க மறுத்தனர். இதனால் செங்கல் சூளைகளில் வேலை செய்யும் 300 குடும்பத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 16-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சூளைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
வேலை நிறுத்தம்
இதுகுறித்து செங்கல் அறுவை தொழிலாளர்கள் கூறுகையில், வீட்டு வாடகை, மளிகை பொருட்கள் விலை உயர்வால் எங்களுக்கு சம்பளம் கட்டுப்படியாகவில்லை, கடந்த ஆண்டைபோல் ரூ.115 சம்பளம் உயர்த்த வேண்டும். செங்கல் சூளைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதுபற்றி செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறுகையில், புதிய சம்பள உயர்வு குறித்து அடுத்த (2024) ஆண்டு ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் குடும்பத்துடன் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.