ஈரோட்டில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்கள்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மணி தலைமை தாங்கினார். இந்திய பள்ளிகள் ஆசிரியர் கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிருஸ்துராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தேசத்தின் எதிர்கால கல்வியை சீரழிக்கும் தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் அனுமதிக்க வேண்டும். அரசு பள்ளிக்கூட மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கிடும் உதவித் தொகை, காலை சிற்றுண்டி திட்டம் போன்றவற்றை அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் துணைச் செயலாளர் சிவகுமார், ஈரோடு கல்வி மாவட்ட தலைவர் சுரேஷ், பவானி கல்வி மாவட்டத் தலைவர் தேவராஜ், சத்தியமங்கலம் கல்வி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மற்றும் தொடக்க பள்ளிக்கூட ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.