கம்பத்தில், அரிசி ஆலைக்குள் புகுந்து துணிகரம்:மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடியை தூவி 4 பவுன் நகை பறிப்பு:பெண் கைது

கம்பத்தில், அரிசி ஆலைக்குள் புகுந்து மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடியை தூவி 4 பவுன் நகையை பறித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கண்ணில் மிளகாய் பொடி
தேனி மாவட்டம் கம்பம் மணிநகரை சேர்ந்தவர் சுருளியம்மாள் (வயது 65). இவரது தனது மகன் முத்துப்பாண்டியுடன் வசித்து வருகிறார். முத்துப்பாண்டி அதே பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். அந்த ஆலையை சுருளியம்மாள் பராமரித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அரிசி ஆலையில் சுருளியம்மாள் இருந்தார்.
அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் கேப்பை மாவு அரைத்து தருமாறு அவரிடம் கேட்டார். அதற்கு அந்த பெண்ணிடம் வேலை ஆட்கள் இன்னும் வரவில்லை. சிறிது நேரம் கழித்து வருமாறு சுருளியம்மாள் கூறி கொண்டிருந்தார். இதற்கிடையே திடீரென அந்த பெண் பையில் வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து சுருளியம்மாள் கண்ணில் தூவினார்.
4 பவுன் நகை பறிப்பு
இதில் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அவர் கதறி துடித்தார். அப்போது அந்த பெண் சுருளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். இதனை அப்பகுதியில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளிகள் பார்த்தனர். உடனே அவர்கள் அந்த பெண்ணை துரத்தி சென்று பிடித்தனர்.
பின்னர் அந்த பெண்ணை கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே சுருளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்ணிடம் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம் (பொறுப்பு) விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அந்த பெண் கம்பம் அருகே உள்ள மஞ்சள் குளத்தை சேர்ந்த முருகன் மனைவி ஜோதிலட்சுமி (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பட்டபகலில் அரிசி ஆலைக்குள் புகுந்து மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்து சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.