கும்பக்கரை அருவியில்வெள்ள அபாய எச்சரிக்கை கருவிபொருத்தும் பணி தீவிரம்

கும்பக்கரை அருவியில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கும்பக்கரை அருவி
பெரியகுளம் அருகே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த மாதம் 25-ந்தேதி பகலில் மேற்கு தொடர்ச்சி மலை, கொடைக்கானல் வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்யும்போது கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளப்பெருக்கு
இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்கும் வகையில், வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரத்தில் அபாய ஒலி எழுப்பும் கருவி பொருத்துவதற்கான பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக அருவிப்பகுதியில் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு அபாய ஒலி எழுப்பும் கருவி பொருத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து வௌ்ளப்பெருக்கு ஏற்படும்போது ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்வதற்காக அருவியின் மையப்பகுதியில் பாலம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பணியினை திண்டுக்கல் மாவட்ட உதவி வன பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். அப்ேபாது வனச்சரகர் டேவிட் ராஜா மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.
அபாய ஒலி எழுப்பும் கருவி
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த கருவியை பொருத்துவதால் இனி வரும் காலங்களில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலா பயணிகளுக்கு அபாய ஒலி எழுப்பி பாதுகாக்க முடியும். மேலும் அக்கரையில் உள்ள சுற்றுலா பயணிகள் இக்கரைக்கு கடந்து வருவதற்கு பாலம் அமைக்கும் பட்சத்தில் எந்தவித பயமும் இன்றி பாதுகாப்பாக குளிக்க முடியும் என்றனர்.
இதற்கிடையே நேற்று நீர்வரத்து சீரானதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.