பண்ணாரி சோதனைசாவடியில் தக்காளி ஏற்றிவந்த சரக்கு வேனில் கடத்திய 20 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது

20 மதுபாட்டில்கள் பறிமுதல்
சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பண்ணாரி சோதனை சாவடியில் அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து கொண்டு இருந்தார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். இதில் சரக்கு வேனை ஓட்டி வந்தவர் ஊத்துக்குளி அருகே உள்ள காளிகுளத்தைச் சேர்ந்த விவேக் (வயது 44) என்று தெரியவந்தது. மேலும் அவரிடம் சரக்கு வேனில் என்ன சரக்கு உள்ளது என்று கேட்டபோது கர்நாடகாவில் உள்ள சிக்கள்ளியில் இருந்து பெருந்துறைக்கு தக்காளி ஏற்றி செல்வதாக தெரிவித்தார்.
உடனே போலீசார் தார்பாயை அகற்றி தக்காளியை காட்டுமாறு கூறினார்கள். ஆனால் டிரைவர் வேனில் இருந்து இறங்கி பண்ணாரி வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த சரக்கு வேனை சோதனை செய்த போது தக்காளி பெட்டிகளுக்கு நடுவே ஒரு பெட்டியில் 20 மது பாட்டில்கள் கடத்தி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மது பாட்டில்களுடன் சரக்கு வேனை பறிமுதல் செய்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி.கார்னரில் பஸ் ஏறி வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற டிரைவர் விவேக்கை போலீசார் கைது செய்தனர்.