ராமலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
பணகுடி:
பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
தைப்பூச திருவிழா
பணகுடி ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள், நம்பி சிங்கபெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு திருநாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் பகலில் கும்பாபிஷேகமும், இரவு சுவாமி-அம்பாள் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
தேரோட்டம்
9-ம் திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. சபாநாயகர் அப்பாவு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சின்ன தேரில் விநாயகரும், பெரிய தேரில் சுவாமி-அம்பாளும் அடுத்தடுத்து பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தன. தேர் நான்கு ரதவீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியில், கோவில் தக்கார் லதா, ஆய்வாளர் கோபாலன், செயல் அலுவலர் ராதா, வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி நாதன், ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம், பணகுடி பேரூராட்சி துணை தலைவர் புஷ்பராஜ், பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.