புனித அமல அன்னை ஆலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடு
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தது. கல்லறைகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையும் செய்யப்பட்டது.
கல்லறை திருநாள்
கிறிஸ்தவர்களின் முக்கிய திருநாள்களில் ஒன்றாக கல்லறை திருநாள் உள்ளது. நவம்பர் 1-ந் தேதி அனைத்து புனிதர்கள் திருநாளாகவும், நவம்பர் 2-ந் தேதி அனைத்து ஆன்மாக்கள் திருநாளாகவும் கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். அனைத்து ஆன்மாக்கள் திருநாள் என்பது கல்லறை திருநாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்த உலகத்தில் வாழ்ந்து நம்மை விட்டு மறைந்து போனவர்களின் ஆன்மாக்கள், இறைவனின் பாத அடியில் இளைப்பாறும் என்பது நம்பிக்கை. ஆனால் பல ஆன்மாக்கள் சொர்க்கம் என்ற நிலையை அடைய காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலைக்கு உத்தரிக்கும் தலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உத்தரிக்கும் தலத்தில் இருக்கும் ஆன்மாக்கள் துன்பத்தை விட்டு விலக ஜெப உதவி மிகவும் அவசியம். அதாவது இந்த ஆன்மாக்களுக்காக, அவர்களை நினைத்து வழிபாடு செய்யும்போது அந்த ஆன்மாக்களின் பாவங்கள் குறைந்து விரைவாக சொர்க்கம் செல்ல பூமியில் வாழும் மக்கள் திருப்பலி நிறைவேற்ற வேண்டும். இதற்காக கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறை திருநாளை கடைபிடித்து வருகிறார்கள். இந்த நாளில் இறந்தவர்களின் உறவினர்கள் கல்லறை தோட்டங்களுக்குசென்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள்.
சிறப்பு வழிபாடுகள்
அதன்படி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நேற்று அனைத்து ஆத்மாக்கள் தினம், கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காலை மற்றும் பகலில் ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை எல்லை மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஈரோடு புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமை தாங்கினார். ரெயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய யூதா ததேயு, புனித அமல அன்னை ஆலய உதவிப்பங்குத்தந்தை நல்ல ஜேக்கப்தாஸ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினார்கள். உலகத்தில் இறந்து போன அனைவரின் ஆன்மாக்களுக்காகவும், யாரும் நினைக்காத ஆன்மாக்களுக்காகவும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் அனைத்தும் பங்குத்தந்தையர்களால் தீர்த்தம் தெளித்து மந்திரிக்கப்பட்டது. இறந்தவர்களின் உறவினர்கள் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றியும், பூமாலைகள் அணிவித்தும் பிரார்த்தனைகள் செய்தனர். இதனால் நேற்று கல்லறை தோட்டம் ஒளி வெள்ளமாக காட்சி அளித்தது.