ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரம் அபேஸ்; வாலிபர் கைது


ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரம் அபேஸ்; வாலிபர் கைது
x

பவானி அருகே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

பவானி

பவானி அருகே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஏ.டி.எம். மையம்

பவானி அருகே உள்ள சித்தோடு வசூவப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 75). டிரைவர். இவர் கடந்த மாதம் 27-ந் தேதி அன்று சித்தோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

அப்போது ஏ.டி.எம். மையம் முன்பு நின்றிருந்த மர்மநபர், சர்வர் கோளாறு காரணமாக ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லை. சரியான பிறகு எடுத்து தருகிறேன் என்று பார்த்திபனிடம் கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மர்மநபர் பார்த்திபனிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரம் உள்ளே செலுத்தினார். ஆனால் பணம் வரவில்லை என்று கூறி திரும்ப அவரிடமே கொடுத்துவிட்டார். இதனால் பார்த்திபன் கார்டை வாங்கிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ரூ.50 ஆயிரம் அபேஸ்

இதைத்தொடர்ந்து அவர் வீட்டுக்கு சென்றதும் தான் வைத்திருந்த ஏ.டி.எம்.கார்டை பார்த்தபோது அது தனது ஏ.டி.எம். கார்டு இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரூ.10 ஆயிரம் வீதம் 5 முறை என மொத்தம் ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது தான் பார்த்திபன் தன்னை மர்மநபர் ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்ததை கண்டுபிடித்தார்

இது குறித்து பார்த்திபன் சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

வாலிபர்

அப்போது பார்த்திபனிடம் இருந்து அந்த நபர் ஏ.டி.எம். கார்டை வாங்கிக்கொண்டு எந்திரம் உள்ளே செலுத்துவதும், பின்னர் பணம் வரவில்லை என்று கூறி நைசாக பார்த்திபன் ஏ.டி.எம்.கார்டை தான் வைத்துக்கொண்டு, தனது ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுப்பதும் பதிவாகியிருந்தது.

அதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் அந்த நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று காலை பவானி லட்சுமி நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கே.வி.பி. வங்கி ஏ.டி.எம். அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

கைது

விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகன் வினோத் (30) என்பதும், அவர் தான் பார்த்திபனிடம் ஏ.டி.எம். மையத்தில் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்ததையும் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story