காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்புமுன்விரோதத்தில் தொழிலாளி குடும்பம் மீது தாக்குதல்உறவினர்கள் சாலை மறியல்

காட்டுமன்னார்கோவில் அருகே முன்விரோதத்தில் தொழிலாளியின் குடும்பத்தை தாக்கியவர்களை கைது செய்ய கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் கிராமத்தில் உள்ள குமிளங்காட்டு தெருவை சேர்ந்தவர் கலிய பெருமாள் (வயது 75). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (52) என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் காலை பார்த்திபன், அவரது தம்பி கரிகால் சோழன் மற்றும் பார்த்திபனின் மகன் கணேஷ் (24) ஆகியோர் சேர்ந்து, கலியபெருமாள் வீட்டு மனையில் இருந்த எல்லைக்கல், இரும்பு கம்பி வேலியை பிடுங்கி போட்டதாக கூறப்படுகிறது.
3 பேர் மீது தாக்குதல்
இதுபற்றி அவர்களிடம், கலியபெருமாள் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து உருட்டு கட்டை, கம்பி ஆகியவற்றால், கலியபெருமாளை தாக்கினர். இதை தடுக்க வந்த கலியபெருமானின் தம்பி ஜெயராமன் (65), ஜெயராமனின் மனைவி ராதா (58) ஆகியோரையும் தாக்கினர். இதில் காயமடைந்த 3 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து கலியபெருமாள் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பார்த்திபன், கணேஷ், கரிகால் சோழன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாலை மறியல்
இந்த புகார் மீது, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, நேற்று காலை கலியபெருமாளின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் கண்டமங்கலத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கிடந்த மரத்தடி ஒன்றையும் கொண்டு வந்து சாலையில் போட்டு இருந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கலியபெருமாள் அளித்த புகாரில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தந்தை, மகன் கைது
இதற்கிடையே, பார்த்திபன், அவரது மகன் கணேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கரிகால்சோழனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.