போலி வக்கீல் அடையாள அட்டையை காண்பித்து கைதியை சந்திக்க முயற்சி

வேலூர் ஜெயிலில் போலி வக்கீல் அடையாள அட்டையை காண்பித்து கைதியை சந்திக்க முயற்சி செய்த ரவுடி ஜானியின் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைதியை சந்திக்க முயற்சி
வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மத்திய ஜெயில் அமைந்துள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் ஏராளமானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். காட்பாடி பகுதியைச் சேர்ந்த சீனு என்ற சீனிவாசன் என்பவர் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை சந்திப்பதற்காக காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல், பிரகாசம் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி ஜானியின் மனைவி ஷாலினி (வயது 33) கடந்த 3-ந் தேதி ஜெயிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர், தான் வக்கீல் எனக்கூறி அடையாள அட்டையை சமர்ப்பித்துள்ளார். அவர் கொடுத்த அடையாள அட்டையில் வழக்கறிஞர் பதிவு எண்ணை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த எண்ணில் வேறு நபர் பெயர் இருந்தது. இதனால் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
விசாரணையில் அவர் ரவுடி ஜானியின் மனைவி ஷாலினி என்பதை போலீசார் கண்டறிந்தனர். மேலும் அவர் வேறு ஒரு வக்கீல் அடையாள அட்டையில் தனது புகைப்படத்தை ஒட்டி எடுத்து வந்திருப்பதையும் உறுதி செய்தனர்.
வழக்குப்பதிவு
இதனையடுத்து விசாரணை கைதி சீனிவாசனை சந்திக்க ஷாலினிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சிறைக் காவலரிடம் அவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கிருந்து திரும்பி சென்று விட்டார்.
இதுகுறித்து ஜெயிலர் மோகன் வேலூர் பாகாயம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் ஷாலினி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஜெயில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.