ஆட்டோ டிரைவர் மர்ம சாவு; உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்

ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆட்டோவில் பிணம்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டியை சேர்ந்த தங்கமணி மகன் விஜயகுமார் (வயது 28). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து, அதனை ஓட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் விஜய குமார், அதே கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு தூங்குவதற்காக சென்றார். ஆனால் இன்று காலை வரை விஜயகுமார் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், விஜயகுமாரை தேடி தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஆட்டோவுக்குள் விஜயகுமார் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். மேலும் அங்கு உறவினர்களும் குவிந்தனர்.
இதற்கிடையே ஆட்டோ டிரைவர் மர்ம சாவு குறித்து ராஜதானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மோப்பநாய், அந்த தோட்டத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிபோய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.
உறவினர்கள் போராட்டம்
இதையடுத்து விஜயகுமாரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அங்கு கூடியிருந்த விஜயகுமாரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி உடலை எடுத்து செல்ல விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விஜயகுமாரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் விஜயகுமார் சாவுக்கு காரணம் என கூறப்பட்ட 4 பேரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் சமரசம் ஆனார்கள். பின்னர் விஜய குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் முத்துசங்கிலிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.