பழங்குடியின மக்களுடன் விழிப்புணர்வு கூட்டம்

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பழங்குடியின மக்களுடன் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை:-
தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வனஉரிமை சட்டத்தின் கீழ் 75 ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அனுபவித்து வரும் பழங்குடியின மக்களுக்கு சிறப்பு பட்டா வழங்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தாசில்தார் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். வனச்சரகர்கள் முருகேசன், சுகுமார் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை அலுவலர்கள், பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் பழங்குடியின மக்கள் 75 ஆண்டு காலத்துக்கு மேல் அனுபவித்து வந்தால் அவர்களுக்கு சிறப்பு பட்டா வழங்கப்படும். மேலும் சிறப்பு பட்டா மூலம் நிலத்தை பெறுபவர்கள் அந்த நிலத்தை விற்கவோ அல்லது மற்றவர்களிடம் இருந்து வாங்கவும் கூடாது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற சிறப்பு பட்டா பழங்குடி இன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தேன்கனிக்கோட்டை தாலுகாவில் தகுதி உள்ள பழங்குடியின மக்களை தேர்ந்தெடுக்க வருவாய்த்துறை வனத்துறை விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வருவாய் துறை, வனத்துறை பழங்குடியின மக்கள் பிரதிநிதிகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜவளகிரி வனச்சரகம் கெப்ரேதொட்டி கிராமத்தில் 13 பழங்குடியின மக்களுக்கு சிறப்பு பட்டா வழங்கப்பட்டுள்ளது.