கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வு ஊர்வலம்

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி வட்டார வளமையம் சார்பில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் பள்ளி சாரா மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான கல்வித்திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பழையபேட்டை வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில், கல்வியின் அவசியம் குறித்தும், 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கல்வி குறித்தும் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஆசிரியர் பயிற்றுனர் ராஜேந்திரன் பேசும் போது, 'புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் கல்வி அறிவு பெறாத 1,773 பேர் இதுவரை பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தின் நோக்கம் கல்லாதோர் இல்லாத நிலை உருவாக்குவதே ஆகும்' என்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.