பவானிசாகர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பொதுமக்கள் முற்றுகை
பவானிசாகர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சத்தியமங்கலம் ரோட்டில் உள்ளது. இங்கு நேற்று காலை 10 மணி அளவில் பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ பி.எல்.சுந்தரம் தலைமையில் ஏராளமான ஆண்கள், பெண்கள் பவானிசாகர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. இதனை உரிய முறையில் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.
அதற்கு வருவாய் ஆய்வாளர் கூறும்போது, 'இனிமேல் மனுக்களை நேரடியாக சென்று விசாரணை செய்து தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க சிபாரிசு செய்யப்படும்' என்று உறுதி அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் காலை 10.40 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.