பயிர் பாதுகாப்பில் ரசாயனமில்லாத பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்


பயிர் பாதுகாப்பில் ரசாயனமில்லாத பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்
x
திருப்பூர்


பயிர் பாதுகாப்பில் ரசாயனங்கள் பயன்படுத்தாமல் பூச்சிப்பொறிகள் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைக்கல்லூரி மாணவர்கள் வழிகாட்டல்கள் வழங்கினர்.

பசுமைப் புரட்சி

உயர் விளைச்சலுக்கு ரசாயன உரங்கள், பூச்சிகளைக் கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக் கொல்லிகள் என பசுமைப் புரட்சிக்குப் பின்பு விவசாயம் என்பது ரசாயனங்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் மண்ணில் தேங்கும் ரசாயனங்களின் மிச்சங்கள் மண்ணிலுள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகளை அழித்து மண்ணை மலடாக்கிக் கொண்டிருக்கிறது. மண்வளம் குன்றி மகசூல் படிப்படியாக குறையும் போது மீண்டும் ரசாயன உரங்களின் அளவை அதிகரித்து மகசூலைப் பெருக்கும் ஆபத்தான நிலையை நோக்கி விவசாயம் சென்று கொண்டிருக்கிறது. மேலும் பூச்சிக்கொல்லிகளின் வீரியத்தால் கேடு செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் இயற்கை எதிரிகள் அழிந்து வருகிறது. அத்துடன் விளைபொருட்களில் தங்கி விடும் ரசாயனங்களின் மிச்சங்களால் மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் பயிர் பாதுகாப்பில் முன்னோர் கடைபிடித்த வழிகளைக் கடைப்பிடித்து இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கான வழிகாட்டல்களையும் உதவிகளையும் வேளாண்துறை செய்து வரும் நிலையில் வேளாண் மாணவர்களும் நேரடியாக விவசாயிகளை சந்தித்து செயல்முறை விளக்கத்துடன் வழிகாட்டல்கள் வழங்கியுள்ளனர்.

வழிகாட்டல்கள்

கிராமத்தங்கல் திட்டத்தில் மடத்துக்குளத்தில் தங்கி பயிற்சி பெற்று வரும் தேனி மாவட்டம் குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி 4 ம் ஆண்டு மாணவர்கள் வேடப்பட்டி பகுதியில் இயற்கை பூச்சிக்கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர்.தென்னை சாகுபடியில் சவாலாக விளங்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பொறி மற்றும் விளக்குப்பொறிகளைப் பயன்படுத்துதல், ஊடுபயிர் சாகுபடி மூலம் இயற்கை எதிரிகளான பொறி வண்டுகள் உள்ளிட்டவை வளர்வதற்கான சூழலை உருவாக்குதல், கிரைசோபெர்லா ஒட்டுண்ணி அட்டைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து வழிகாட்டல்கள் வழங்கினர்.

மேலும் நெற்பயிரில் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தி ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிப்பது குறித்து விளக்கிக் கூறினர். பூச்சிப்பொறிகளைப் பயன்படுத்தி மண்வளத்தையும் பயிர் பாதுகாப்பையும் மேம்படுத்துவதுடன் பூச்சிக்கொல்லிகளின் செலவைக் குறைத்து லாபம் ஈட்டலாம் என்று ஆலோசனை வழங்கினர். மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story