பொம்மதேவர் கோவில் திருவிழா


பொம்மதேவர் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை பெண்ணையில் பொம்மதேவர் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடினர்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலை பெண்ணையில் பொம்மதேவர் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடினர்.

பொம்மதேவர் கோவில்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பெண்ணை பகுதியில் ஆதிவாசி மற்றும் மவுண்டாடன்செட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குலதெய்வ கோவிலான பொம்ம தேவர் கோவில் வனப்பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொம்ம தேவருக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல குடும்பங்கள் சன்னக்கொல்லி பகுதியில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பொம்மதேவர் கோவில் திருவிழா பெண்ணை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விடிய விடிய விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 2-வது நாள் காலை 10 மணிக்கு அருள்வாக்கும், தொடர்ந்து தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் சுவாமிக்கு வாழைக்குலைகள் படையல் செய்யப்பட்டது.

பாரம்பரிய நடனம்

இதில் கூடலூர், பந்தலூர் தாலுகாவை சேர்ந்த ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட கிராம மக்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி கொண்டாடினர். பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுகுறித்து ஆதிவாசி மக்கள், மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் கூறும்போது, முதுமலை வனப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த நிலையில் மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் வெளியிடங்களில் வசித்து வருகிறோம். இருப்பினும் குலதெய்வ கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால், வனத்துறையினரின் அனுமதி பெற்று இரவு முழுவதும் தங்கி கோவில் விழா நடத்தப்பட்டு வருகிறது. குலதெய்வ வழிபாடு நடத்துவதால் மழை வளம், விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம் என்றனர்.


Next Story