விவசாயி வீட்டில் புகுந்து ரூ.1¼ லட்சம் கொள்ளை

ஓட்டப்பிடாரண் அருே விவசாயி வீட்டில் புகுந்து ரூ.1¼ லட்சம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே, விவசாயி வீட்டில் புகுந்து ரூ.1¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தையா, விவசாயி. இவரது மனைவி சின்னத்தாய் (வயது 51). கணவன் - மனைவி இருவரும் கடந்த 28-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றனர்.
கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டு கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பதறியவாறு இருவரும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த துணிகள் கீழே சிதறி கிடந்தன.
ரூ.1¼ லட்சம் கொள்ளை
மேலும், பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னத்தாய் புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்நாராயணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்து வருகிறார்.
இதுபற்றி புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடுபுகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.