துணை மின்நிலைய கதவை உடைத்து உள்ளே புகுந்த 6 காட்டுயானைகள்


துணை மின்நிலைய கதவை உடைத்து   உள்ளே புகுந்த 6 காட்டுயானைகள்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வடவள்ளியில் துணை மின் நிலைய கதவை உடைத்து 6 காட்டு யானைகள் உள்ளே புகுந்தன. உடனே மின் இணைப்பை துண்டித்து யானைகளை ஊழியர்கள் காப்பாற்றினர்.

கோயம்புத்தூர்

வடவள்ளி

வடவள்ளியில் துணை மின் நிலைய கதவை உடைத்து 6 காட்டு யானைகள் உள்ளே புகுந்தன. உடனே மின் இணைப்பை துண்டித்து யானைகளை ஊழியர்கள் காப்பாற்றினர்.

காட்டு யானை கூட்டம்

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை வனப்பகுதி உள்ளது. தற்போது காட்டு யானைகள் இடம் பெயரும் காலமாக உள்ளது.

அதன் வலசை பாதையாக இருப்பதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் தடாகம், மருதமலை வனப்பகுதிக்குள் வந்துள்ளன.

இந்த நிலையில் மருதமலை வனப் பகுதியில் இருந்து 8 காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி வந்தன. அதில் 6 காட்டு யானைகள் கோவை அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்து அங்கும் இங்கும் சுற்றியது.

இதையடுத்து அந்த யானைகள் திடீரென்று அங்கிருந்த துணைமின் நிலையத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.

மின் இணைப்பு துண்டிப்பு

இதை பார்த்து அங்கிருந்த மின்நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டு யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கேயே சுற்றி வந்தன.

இதனால் யானைகள் மின்வயர்களை தொட்டால் விபரீதம் ஏற்படும் என்பதை உணர்ந்த லைன் இன்ஸ்பெக்டர் ரமேஷ், கேங்மேன் மணிமாறன் ஆகியோர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

உடனே அவர்கள் மின்இணைப்பை துண்டிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து துணை மின் நிலையத்திற்குள் மின் இணைப்பை ஊழியர்கள் துண்டித்தனர். இதனால் யானைகளுக்கு பாதிப்பு ஏற்படாத நிலை உருவானது.

உயிர் தப்பின

இதைத்தொடர்ந்து மின்நிலைய ஊழியர்கள், காட்டு யானைக ளை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், நீண்டநேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

காட்டு யானைகள் மின்வயர்களை தொட்டு இருந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால் மின்சார வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்த தால் 6 யானைகள் உயிர் தப்பியதாகவும், இதற்காக மின் ஊழியர் களை பாராட்டுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story