576 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்


576 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்
x

வேலூர் மாவட்டத்தில் 576 அரசு பள்ளிகளில் படிக்கும் 32,304 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

வேலூர்

காலை உணவு திட்டம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தொடங்கி வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அருகே உள்ள சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

576 அரசு பள்ளிகள்

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் 3 பள்ளிகளில் 324 மாணவர்கள், குடியாத்தம் நகராட்சியில் 17 பள்ளிகளில் 857 மாணவர்கள், பேரணாம்பட்டு நகராட்சியில் 4 பள்ளிகளில் 524 மாணவர்கள், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் ஆகிய பேரூராட்சிகளில் 24 பள்ளிகளில் 1,467 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது.

அதேபோன்று வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், கணியம்பாடி, பேரணாம்பட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 528 பள்ளிகளில் 29,132 மாணவர்கள் என்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 576 பள்ளிகளில் 32,304 மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். அனைத்து பள்ளி நாட்களிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இதையொட்டி காலை உணவு திட்டத்துக்கான முன்னேற்பாடு பணிகள் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டன. சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பிரம்மபுரம் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோன்று மாநகராட்சி அதிகாரிகள், அந்தந்த தாலுகா தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் திட்ட அலுவலர் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் காலை உணவு தயார் செய்யப்படும் சமையல் கூடம், பள்ளியில் உணவை வைப்பதற்கான பாத்திரங்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்தனர்.


Next Story