மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒருவர் பலி

குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒருவர் பலியானார். மேலும் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
கார் மோதல்
திருச்சி மாவட்டம், மேலமூகூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). புகைப்பட கலைஞர். இவர் கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான மற்றொரு புகைப்பட கலைஞரான திருச்சி துவாக்குடி பகுதியை சேர்ந்த சசிகுமார் (48) என்பவருடன் திருச்சியில் இருந்து குளித்தலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குளித்தலை அருகே உள்ள மருதூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, அதே சாலையில் எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சசிகுமார் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். முருகேசன் காயம் அடைந்தார்.
பலி
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகேசன் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் சசிகுமார் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமாக இறந்தார். இந்தவிபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.