நடுரோட்டில் தீப்பிடித்த காரால் பரபரப்பு

சூளகிரி:
சேலத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே போலுமலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. மேலும் நடுரோட்டில் கார் தீப்பிடிக்க தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தினார். மேலும் அதில் இருந்த அனைவரும் உடனடியாக இறங்கினர்.
இந்தநிலையில் கார் முழுவதும் தீ மளமளவென பரவி, கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள். நடுரோட்டில் கார் தீப்பிடித்த எரிந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.