கார்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

வேளாங்கண்ணி அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
வேளாங்கண்ணி:
திருமருகல் அருவிழி மழலை வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் ஆனந்த் (வயது 19). கம்பிபிட்டர் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேதாரண்யத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பிரதாபராமபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அதேநேரம் எதிரே வந்த கிராமத்து மேடு நாவலர் தெரு பகுதியை சேர்ந்த அன்னப்பன் மகன் சஞ்சய் காந்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கீழே விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆனந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சஞ்சய் காந்தி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.