பா.ஜ.க. மாவட்ட தலைவர் உள்பட 25 பேர் மீது வழக்கு

பா.ஜ.க. மாவட்ட தலைவர் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசனை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வீடு புகுந்து கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பாக சென்னை கூலிப்படையை சேர்ந்த 2 வாலிபர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின்போது தரணி முருகேசனின் மேலாளர் கணேசன் உள்ளிட்ட இருவர் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அதில் ஒருவரை டிஸ்சார்ஜ் செய்ய ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், கொலை செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தரணி முருகேசன் தலைமையில் பா.ஜ.க.வினர் நேற்று முன்தினம் இரவு அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசன் உள்பட 25 பேர் மீது நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.