பெண்ணை அரிவாளால் தாக்கிய 3 பேர் மீது வழக்கு
வீரபாண்டி அருகே பெண்ணை அரிவாளால் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வீரபாண்டி அருகே உள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் ஓடை தெருவை சேர்ந்தவர் ரம்யா (வயது 23). நேற்று முன்தினம் இவர், தனது தாய் தனலட்சுமி, அக்காள் காயத்ரி ஆகியோருடன் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த ராமர், அவரது மனைவி சந்தியா, அவரது தாய் நாகம்மாள் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் முன்விரோதம் காரணமாக தனலட்சுமி, ரம்யா, காயத்ரி ஆகிய 3 பேரையும் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ராமர் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் தனலட்சுமியை தாக்கினார். இதை தடுக்க முயன்ற காயத்ரி, ரம்யா ஆகியோரையும் கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த ரம்யா உள்பட 3 பேரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ரம்யா வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ராமர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.