நகர கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் மீது வழக்கு

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த திருக்கோவிலூர் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் உதவி கிளை மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
உளுந்தூர்பேட்டை
உதவி கிளை மேலாளர்
திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில் உதவி கிளை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் பழனி. இவர் கடந்த 1998-ம் ஆண்டு 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விசாரணை நடத்தினர். இதில் பழனி மீதான புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வலைவீச்சு
இந்த நிலையில் வங்கியின் மேலாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் பழனி மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பழனி போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கடந்த 24 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் அவர் திடீரென தலைமறைவாகி விட்டார். பழனியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.