கூடுதல் தொகைக்கு வட்டி தராததால் வழக்கு: செல்போன் கடை- நிதி நிறுவனத்துக்கு அபராதம்


கூடுதல் தொகைக்கு வட்டி தராததால் வழக்கு: செல்போன் கடை-  நிதி நிறுவனத்துக்கு அபராதம்
x

செல்போன் வாங்கிய வாடிக்கையாளரிடம் பெற்ற கூடுதல் தொகைக்கு வட்டி கொடுக்காதது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் செல்போன் கடை, நிதி நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

திருநெல்வேலி

நெல்லை பழையபேட்டையை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 44). இவர் நெல்லையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் செல்போன் வாங்கி உள்ளார். செல்போன் வாங்குவதற்கு தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.15,492 கடன் பெற்றுள்ளார். அதற்கு மாதம் தவணைத்தொகை ரூ.1,291 வீதம் மொத்தம் 12 மாதம் செலுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையே மாரியப்பன் செல்போன் வாங்கும்போது, அவரிடம் ரொக்கமாகவும் பணம் பெற்றுள்ளனர். ஆனால் கடன் பெற்ற தொகையில் அந்த பணத்தை கழிக்கவில்லை. இதனால் கூடுதலாக செலுத்திய ரூ.3,400-ஐ மாரியப்பன் திரும்பக் கேட்டார். அதன்பிறகு ரூ.3,400-க்கு வங்கி வரைவோலை வழங்கி உள்ளனர். ஆனால் கூடுதலாக பெற்றிருந்த பணத்துக்கு வட்டி தரவில்லை என்று கூறி மாரியப்பன், வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி கிளாட்சன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் விசாரித்து மாரியப்பனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ.2 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.12 ஆயிரத்தை, செல்போன் கடை மற்றும் நிதி நிறுவனம் வழங்க உத்தரவிட்டனர்.


Next Story