கச்சத்தீவை போல காவிரியையும் தி.மு.க. தாரை வார்த்து விடும் என மக்கள் அச்சம் -ஆர்.பி.உதயகுமார் பேட்டி


கச்சத்தீவை போல காவிரியையும் தி.மு.க. தாரை வார்த்து விடும் என மக்கள் அச்சம் -ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x

கச்சத்தீவை போல காவிரியையும் தி.மு.க. தாரை வார்த்து விடும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை


கச்சத்தீவை போல காவிரியையும் தி.மு.க. தாரை வார்த்து விடும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

நலத்திட்ட உதவிகள்

மதுரை அட்சய பாத்திரம் அமைப்பின் மூலம் உணவு வழங்கும் திட்டத்தின் 800-வது நாளை முன்னிட்டும், ஆடி அமாவாசையை முன்னிட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, சேலை, வேட்டி மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியத்தில் நேற்று நடந்தது. மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாடு திருப்புமுனையாக அமையும். இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் குடும்பம், குடும்பமாக பங்கேற்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரையில் கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து இருக்கிறார். மதுரை மக்கள் நூலகம் வேண்டும் என்று எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோரிப்பாளையம் மேம்பாலம், பெரியார் சிம்மக்கல் மேம்பாலம், மேலமடை மேம்பாலம் ஆகிய திட்டங்கள் கிடப்பில் உள்ளது. மதுரையை சர்வதேச விமான நிலையமாக்க அண்டர்பாஸ் திட்டம், சேலம், மதுரை, கோவை ஆகிய இடங்களில் கொண்டு வரப்பட்ட பஸ்போர்ட் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை, துணைக்கோள் நகரம் போன்ற திட்டங்களும் கிடப்பில் உள்ளது.

விலை உயர்வு

மதுரையில் 2 திட்டங்களை தான் தி.மு.க. செயல்படுத்தி உள்ளது. ஒன்று நூலகம், மற்றொன்று ஜல்லிக்கட்டுக்கு மைதானம். பாரம்பரியமிக்க வாடிவாசல் வழியாகத்தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இது பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறை. அதனை மாற்றி ஒரு மைதானத்தில் நடத்துவது ஏற்றுகொள்ள முடியாது. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை யாரும் கேட்கவும் இல்லை. இதற்கு கூட தனது தந்தை பெயரைதான் முதல்-அமைச்சர் சூட்டுவார். இன்றைக்கு விலைவாசி உயர்ந்து விட்டது. இன்றைக்கு மக்கள் குழம்பு வைக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தாமல் முதல்-அமைச்சர் பெங்களூரு சென்றுள்ளார்.

எழுதாத பேனாவிற்கு முதல்-அமைச்சர் ரூ.84 கோடியில் கடலில் சிலை வைக்கிறார். மின்சார கட்டணம், பால்விலை, சொத்து வரி உயர்ந்து விட்டது, கேரளா அரசு முல்லைப் பெரியாறில் அணைக்கட்ட முயற்சிக்கிறது. மேகதாதுவில் கர்நாடகா அரசு அணைக்கட்ட முயற்சிக்கிறது. தி.மு.க. ஆட்சியில் கச்சத்தீவு உரிமை பறிபோனது போல், காவிரியும் தாரை வார்க்கப்படுமா என்று மக்களும், விவசாயிகளும் அச்சப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் வாய்தா வாங்கி, வாய்தா அமைச்சராக இருந்தார்கள். தற்போது இந்த 2 ஆண்டுகளில் திடீரென்று விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசு வீட்டுக்குப் போகும், எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு போவார். அதற்கு பிள்ளையார் சுழியாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story